1966 இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ஒரு புளியமரத்தின் கதை ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுளள் இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000 த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புளியமரத்தின் கதை குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே.எம்.ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசு பெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்.
நன்றி - http://azhiyasudargal.blogspot.com/2012/03/blog-post_17.html
ஒரு புளியமரத்தின் கதை-முன்னுரை- சுந்தர ராமசாமி
இது என்னுடைய முதல் நாவல்.
நண்பர் ஸ்ரீ விஜயபாஸ்கரன் சரஸ்வதிக்கு ஒரு தொடர்கதை வேண்டு மென்று கேட்டார். 1959இல் நாவலாக எழுதிவிடலாம் என்று நான் நம்பிய கரு ஒன்று அப்போது என் மனசில் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஒப்புக்கொண்டேன். நாலைந்து அத்தியாயங்கள் வெளிவந்ததும் சரஸ்வதி தளர்ந்துவிட்டது. கையோடு அப்போதே இந்த நாவலை எழுதி
1956 - 57 ஆண்டுகளில், சாயங்கால வேளைகளில் பள்ளி மணி அடித்துச் சில நிமிஷங்களுக்கெல்லாம் பஜாரில் தெற்கேயிருந்து ஒரு வாத்தியாரம்மா தோன்றி வடக்கே போவதை எண்ணற்ற நாட்கள் பார்த்திருக்கிறேன். அவளுடைய நடையழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது. தேவதூதர்கள் இருமருங்கும் நின்று அவள் பாதம்படப் பூக்கள் தூவிச் செல்வது என் கண்களுக்குத்தான் தெரிய வில்லை என்று எண்ணிக்கொள்வேன். மனசில் பதிந்துவிட்ட அவளுடைய உருவமே இந்நாவலில் செல்லத்தாயின் உருவாக அந்தர்முகமாய் நின்று தொழில்பட்டிருக்கிறது என்ற உண்மை சமீபத்தில் ஒருநாள் ஏதோ ஒரு நிமிஷத்தில் என் மனசில் பளிச் சிட்டது. அவளுக்கும் செல்லத்தாயிக்கும் ஒட்டும் உறவும் இல்லை தான். இருந்தாலும் விஷயம் உண்மை.
இந்நாவலின் கதாபாத்திரங்களில் பெண்கள் மிகக் குறைவு. நம் தேச ஜனத்தொகையில் பெண்களுக்குரிய வீதாசாரமான பிரதிநிதித் துவம் ஏகதேசமாய்க்கூட இந்நாவலில் அளிக்கப்படவில்லை. ஏதோ அவ்வாறு நிகழ்ந்துவிட்டது. உண்மையில் ஒரு பெண் கதாபாத்தி ரத்திற்கு நிறையப் பங்கு அளிக்கவே உத்தேசித்திருந்தேன். 1958இல் எங்கள் ஊரில் நான் விரும்பும் நாவலாசிரியர் ஒருவர் வந்து தங்கியிருந்தார். நானும் என் இலக்கிய நண்பரும் வெகு நேரம் ஆசை யோடு அவருடன் பேசிக்கொண்டிருப்போம். பேச்சு அலுப்புற்ற வேளைகளில் அந்த ஓட்டலின் இரண்டாவது மாடியில் நின்று பஜார் இயக்கங்களை வேடிக்கை பார்த்தபடி இருப்போம். அங்கிருந்து நேராகக் கீழே பார்த்தால் சினிமா தியேட்டரை ஒட்டிப் பொரி கடலைக்காரி ஒருத்தி உட்கார்ந்துகொண்டிருப்பது தெரியும். மேலே இருந்து பார்க்கையில் முறத்தில் பொரிகடலைக் குவியல்மீது அவளுடைய சிரம் வெட்டி வைக்கப்பட்டிருப்பது போல் தெரியும். இந்தக் கோணத்தில் பார்க்க நேர்ந்ததால் அவள் என் மனசில் இடம் பெற்றாள். கொழகொழவென்று வெற்றிலைச் சாறு தளும்பும் வாயுடன், தலையில் கனகாம்பர மூட்டையுடன், பெரிய பொட்டு டன், மலிவான அலங்காரங்களுடன், செயற்கைக் கவர்ச்சிகளுடன், ‘இது என் தொழில் அல்ல; உப தொழில்’ எனப் போடாமல் போடும் கோஷத்துடன், சிரிப்பும் வசையுமாக, கண்களால் ஆண்மையை அவ்வப்போது சீண்டியபடி இருப்பாள். அவளுக்கு இந்நாவலில் முக்கிய பங்கு அளிக்கவேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஒரு அத்தியாயத்தில் அவளை அறிமுகப்படுத்தியும் வைத் தேன். கூலி ஐயப்பனின் காதலியாகவோ, சகோதரியாகவோ, மாமியாராகவோ பின்னால் வளர்த்திக்கொண்டு வரவேண்டு மென்று யோசித்திருந்தேன். அடித்துத் திருத்திக் கிழித்துப்போட்டுத் திரும்ப எழுதிய பக்கங்களின் அவஸ்தையில் அவள் எப்போது நழுவி வெளியே விழுந்தாள் என்பதே தெரியவில்லை.
இது என்னுடைய முதல் நாவல்.
நாவல் துறைக்கு இந்நாவல்வழி நான் அறிமுகமாக நேர்ந்தது எனக்கு ஏதேதோ வகைகளில் திருப்தியைத் தருகிறது.
படித்துப் பாருங்கள். இந்த நாவல் உங்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் இருக்கலாம். சில நாவல்கள் நன்றாக இருக்கும். சில நாவல்கள் நன்றாய் இராது.
நான் இதைவிடவும் விரும்பும் நாவல் ஒன்றைப் பின்னால் எழுதக் கூடுமென்று தோன்றுகிறது.
நாகர்கோயில் சுந்தர ராமசாமி
நன்றி - http://puthu.thinnai.com/?p=1754
நாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் – நகரும் கதைகள். ஒரு மரம் எங்கும் நகர்ந்து போவதில்லை. ஆனால் அது வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதை சுற்றிலும் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் அது அப்படியே தான் இருக்கிறது. எத்தனை மனிதர்கள் வந்து போனாலும் அதனிடம் எந்த மாற்றமும் இல்லை. அது தனக்கான வாழ்க்கையை வாழ்கிறது. வாழ்ந்து கொண்டே இருக்கிறது. இது எல்லா மரத்துக்கும் பொருந்தும் விஷயம் தான். அப்படி ஒரு புளிய மரத்தை சுற்றி நடக்கிற சம்பவங்களை எல்லாம் கோர்த்து நாவலாக்கியிருக்கிறார் திரு.சுந்தர ராமசாமி அவர்கள். 1960-களில் எழுதப்பட்ட நாவல் இன்றும் வாசிக்க வாசிக்க சுவை மிகுந்த அனுபவமாகவே இருக்கிறது.
ஒரு குளத்தின் நடுவில் வளரும் புளிய மரம் தான் இறக்கும் போது நகரின் மையத்துக்கு வந்து விடுகிறது. மரத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அப்படி. மற்றபடி மரம் நகரவில்லை. புளிய மரம் மரணிக்கும் போது கூட, அது பூ பூப்பதை போலவும் காய் காய்ப்பதை போலவும் இயல்பாக மரணிக்கிறது. மரணத்தை வெகு இயல்பாக ஏற்றுக் கொள்கிறது.
இந்த நாவல் ஒரு மரத்தை பற்றி மட்டுமல்ல. மரத்தை அடிப்படையாக வைத்து, சுதந்திர இந்தியா அறுபதுகளில் எப்படி இருந்தது என்பதையும் அழகாக எடுத்துச் செல்கிறது. காதர், தாமு, செல்லப்பன், கடலை தாத்தா, இசக்கி இவர்களுக்கு இடையிலான அரசியல் இன்றும் நிஜ வாழ்க்கையில் மாறாமல் இருப்பது வருத்தமாகத் தான் இருக்கிறது.
தாமோதர ஆசான் என்ற கதாபாத்திரம் யதார்த்தத்தின் உச்சம் என்றே சொல்லலாம். இன்று அது போன்ற மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது. தன் அனுபவங்களை வண்டு சிண்டுகளிடம் சொல்லி மகிழும் தாதாக்களை காண்பதே அரிதாகிவிட்டது. எல்லாவற்றையும் இன்று தொலைகாட்சிகள் தின்று விட்டன.
புளிய மரத்தின் அருகிலிருந்த காற்றாடி மரத் தோப்பை வெட்டி சாய்த்து அங்கே ஒரு பூங்காவை அமைக்க அரசாங்கம் முன்வருகிறது. மரங்கள் வெட்டப்படுவதை கூட்டமாக நின்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு முதியவர்க்கும் ஒரு இளைஞனுக்கும் இடையேயான உரையாடல் இந்த நாவலின் தேன் சொட்டு:
“தம்பி எதுக்குடேய் மரத்தே வெட்டிச் சாய்க்கிறாங்க?”
“செடி வெக்கப் போறாங்க”
“எதுக்குடேய் செடி வெக்கப் போறாங்க?”
“காத்துக்கு”
“மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துக் தரும்?”
“அளகுக்கு”
“செடி தான் அளகாட்டு இருக்குமோ?”
“உம்”
“செடி மரமாயுடாதொவ்?”
இளைஞன் கிழவர் முகத்தை பார்த்தான். பொறுமையிழந்து “மரமாட்டு வளராத செடிதான் வைப்பாங்க. இல்லை, வெட்டிவெட்டி விடுவாங்க” என்றான்.
“வெட்டி வெட்டி விடுவாங்கள?”
“ஆமா”
“அட பயித்தாரப் பயக்களா!”